a blurry blue background with horizontal lines
a blurry blue background with horizontal lines

மகா சிவராத்திரி பற்றிய தகவல்கள்

நங்கநல்லூர் கனெக்ட் வாசகர் பகிர்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதிவு

Spiritual Desk

a blurry blue background with horizontal lines
gray concrete statue under blue sky during daytime
gray concrete statue under blue sky during daytime

மகா சிவராத்திரி அன்று கண் விழிப்பது முக்கியம் அல்ல. எப்படிக் கண் விழிப்பது என்பதே மிக முக்கியம்

திரைப்படம் பார்த்துக் கொண்டோ அரட்டை அடித்துக் கொண்டோ அம்மன் சுவாமி நவ கிரகம் சப்த மாதர் ஜீவ சமாதி அந்த மடம் இந்த குரு என்று அலைந்து திரிந்து

நம்மைப் போன்ற ஆண் பெண் ஜீவ ராசியோடு இருந்து கண் விழிப்பதில் பலன் இல்லை.

சிவ நினைவோடு சிவ நாமம் ஓதி ஈசன் மகிமை பேசி தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைத் தோத்திரம் சொல்லிக் கண் விழிக்க வேண்டும்.

சிவ சகஸ்ர நாமம்

ஆயிரம் சிவ நாமம் ஓத வேண்டும்.

தெய்வ பாலகர் தேவாரத்தில் எல்லாப் பதிகங்களிலும் ஒன்பதாம் பாடல்கள் லிங்கம் லிங்கோற்பவர் துதி.

இவற்றை ஓதினால் அளவு கடந்த புண்ணியம் .

எந்தத் துதியும் சொல்ல முடியவில்லை என்றால் ஆயிரம் நாமம் ஓத முடியவில்லை என்றால் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் என்ற மகா மந்திரமே போதும்.

இதை மௌனமாகவோ வாய்விட்டோ ஓதலாம். ஓதி ஓதி ஏட்டிலும் எழுதலாம்.

வில்வம் சிறந்தது உகந்தது என்று கிழிந்த இலை,

பூச்சி அரித்த இலை,

அழுகிய இலை, பழுத்த இலை,

வாடிய இலை என்று ஏதோ ஒன்றை அர்ச்சித்தால் புண்ணியம் இல்லை

. பாவமே உண்டாகும்.

வில்வம் சிறந்தது என்று தெய்வீக நூல்கள் கூறவில்லை.

தாளி அறுகாம் உவந்த தார்

தாளின் அறுகின் தாராய் போற்றி

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் (திருவாசகம்)

என அறுகம் புல்லே சிவ பூசைக்கு மிகச் சிறந்த பச்சிலை என்று மனித உடலில் இருந்த நந்தி தேவரால் பாடப்பட்டு அடியார் வடிவில் இருந்த ஐந்தொழில் திருச்சிற்றம்பலவரால் எழுதப்பட்ட தெய்வீகத் திருவாசகம் காட்டுகிறது.

பிரம்மன் விசுணு சக்தி லட்சுமி சரசுவதி பூமி தேவி சக்தியின் அவதாரங்களான தாட்சாயிணி (கௌரி,காமாட்சி) பார்வதி மற்றும் கங்கை யம்மன் இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தேவர்கள் கணங்கள் எல்லோரும் அறுகம் புல்லால் துதி பாடி அர்ச்சனை செய்து வழிபட்டுத் திருப்பணி செய்வதை

🌱 அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மின் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்

முத்து நல் தாமம் பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபம் தீபம் வைம்மின்

சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின்

சித்தியும் கௌரியும் பாப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்மின் (திருவாசகம்)

என்று ஆட்கொள்ளப்பட்ட நொடியிலிருந்து எல்லோருக்கும் முன்பாக முதல் பூசை செய்யும் அதிகாரம் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற நந்தி தேவராக வாழ்ந்த ஓங்கார வாசகர்* உரைக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை,

தவனச் சடை முடித் தாமரையானே (திருமந்திரம்)

🌴. *நொச்சியாயினும் கரந்தையாயினும்* பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் (சந்நியாசி பட்டினத்து அடிகள்)

🌱 நொச்சியம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் (சுந்தரர்)

என அறுகம்புல் தவனம் மருகு (மருக்கொழுந்து) வன்னி நொச்சி வில்வம் எருக்கு என எந்த இலை இட்டாலும் ஒரே ஒரு இலை பூசித்தாலும் அது நல்ல சிறந்த சுத்தமான பச்சிலையாக* இருக்க வேண்டும்.

சிவராத்திரி பரஞ்சோதியின் திருநாள்.

பரஞ்சோதி அதன் நடுவே

சுடர்ப் பெருமான், அருட்பெருஞ்சோதி ஆண்டவர், செழுஞ்சுடர் மூர்த்தி, சிவக்கொழுந்து ஈசர், லிங்கோற்பவர் அண்ணா மலையார் என்ற இரட்டை வடிவத் திருநாள்.

ஆதனால் இரவு முழுவதும் தீபம் எரிய வேண்டும்.

தீபச் சுடரே சிவ லிங்கம். சோதி லிங்கம். இயற்கையான அக்கினி லிங்கம்.

சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே (திருவாசகம்)

என தீபச் சுடர், தீப ஒளி லிங்கமாக இருப்பதாலேயே தினமும் காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றப்படுகிறது.

கோயிலில் விளக்கேற்றுவது முதன்மையான திருப்பணியாகச் சிறப்புறுகிறது,

கார்த்திகை மாதம் விளக்கேற்றுவது திருவிழாவாகவே சிறப்புறுகிறது.

நல்லக விளக்கு அது நமச்சிவாயவே (அப்பர்)

ஒளி வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே (திருவிசைப்பா)

தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே

செப்புதற்கு அரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே (திருவாசகம்)

சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுள் சோதியான் (சம்பந்தர்)

என விளக்கும் எரிகின்ற சுடரும் ஆவுடையார் பீடம் அமைந்த ஓங்கார வடிவ லிங்கமாக இருப்பதால்

விளக்கில் விபூதி சந்தனம் குங்குமம் இட்ட பிறகே ஏற்ற வேண்டும்.

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல் அக விளக்கு அது சோதி உள்ளது

பல்லக விளக்கு அது பலரும் காண்பது

நல்லக விளக்கு அது நமச்சிவாயவே. (அப்பர்)

என்ற மந்திரம் ஓதி விளக்கேற்றினால்

ஆணவ இருள்,

அறியாமை இருள் ,

நாத்திக இருள் ஆகிய எல்லா விதமான இருளும் நீங்கும்.

வாழ்க்கை சிவ மயமாகும் ஒளி மயமாகும்.

ஒன்று அவன் தானே (திருமூலர்)

ஒருவன் என்னும் ஒருவன்( திருவாசகம்)

என எல்லோருக்கும் ஒரே கடவுளான பரமேஸ்வரனை எல்லா தெய்வங்களும் சுவாமிகளும் அம்மன்களும்

நம்மைப் போல் கோயிலுக்கு வந்து சிவ பூஜை செய்யும் பக்தர்களே.

ஆதலால் அவர்களை சக பக்தர்களை சக ஜீவ ராசிகளை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை.

மாறாக எல்லாம் கடந்த கடவுளையும் ,

சிவ வடிவம் மட்டுமே அமைத்து ஆகம விதிப்படிக் கோயில் கட்டிய மெய்யன்பர்களையும் அவ மதித்து

பக்தர்களுக்கு மனம் போனபடி மனம் போன இடத்தில் ஆகம விரோதமாகச் சந்நிதி கட்டி வைத்துக் கட்டுக் கதை நாஸ்திகக் கதை பேசி வழிபட்டால்

சிவ நிந்தனை

அடியார் நிந்தனை என்று பல மடங்கு பாவமே உண்டாகும்.

தான் ஒருவனே இறைவியும் இறைவனுமாக அப்பனும் அம்மையுமாக உள்ள பரஞ்சோதி துதி,

மகா சிவராத்திரி நாயகன் லிங்கோற்பவர் துதி .

பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான்

வரி அரவு அணை மறி கடல் துயின்ற

கரியவன் அலரவன் காண்ப அரிய

எரி அவன் வள நகர் இடைமருதே (சம்பந்தர்)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த

சுடர் மணி விளக்கினுள் ஒளி விளக்கும் தூய நல் சோதியுள் சோதி

அடல் விடைப்பாகா அம்பலக் கூத்தா அயனொடு மால் அறியாமைப்

படரொளிப் பரப்பிப் பரந்து நின்றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே (திருவிசைப்பா)

ஓதி யாரும் அறிவார் இலை உலகெலாம்

சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுள் சோதியான்

வேதியாகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாகி

ஆதியாகி நின்றானும் ஐயாறுடைய ஐயனே (சம்பந்தர்)

பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே

நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ளச்

சீர் உறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே

யார் உறவு எனக்கு இங்கு ஆர் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதீ (திருவாசகம்)

செங்கணானும் பிரமனும் தம்முளே*

*எங்கும் தேடித்* திரிந்தவர் காண்கிலார்

இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்

பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே (அப்பர்)

வளம்பட்டு அலர் மலர் மேயவனும் மாலும் ஒரு வகையால்

*அளம்பட்டு அறி ஒண்ணா வகை* அழல் ஆகிய அண்ணல்

உளம்பட்டு *எழு* தழல் தூண் அதன் நடுவே ஒரு உருவம்

விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே (சம்பந்தர்).

குறிப்பு: இந்த பதிவில் இடம்பெறும் தகவல்கள் எங்கள் வாசகர்கள் நங்கள்ளூர் கனெக்ட்டிடம் பகிர்ந்துள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டவை. இந்த தகவல்களின் முதன்மை ஆசிரியர் குறித்து தெளிவான விவரங்கள் எங்களிடம் இல்லை. பொதுத் தகவலாகவும், வாசகர்களுடன் பகிரும் நோக்கத்திலேயே இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.



Join our WhatsApp Channel to get instant Nanganallur updates (turn on the bell button on top right of the channel to turn on notifications)
Channel link - https://whatsapp.com/channel/0029Vb7ICQp11ulNtwS1UU2e
Or send 'Nanganallur' to 72003 05853 to get the Nanganallur updates Channel link
For advertising, contact 72003 05802

a blurry blue background with horizontal lines